அனுதின செபமாலை

அனுதின செபமாலை

ஆக்கம் : ராஜி ஆதர்ஷ்

பிரிந்த மனங்களை செபம் இணைத்தது

ஆம், COVID-19 புதிய நச்சுக்கிருமியின் பிடியில் உலகமே சிக்கி தவிக்கின்ற இந்த நேரத்தில் ,அனைவரும் கூண்டு கிளிகளாய் மனைகளிலே அடைபட்டோம். கலங்கியது மனம், பதறியது உள்ளம் – இறைவா, நாம் இந்த வீட்டு சிறையில் சிக்கி இயல்பு வாழ்க்கையை இழந்து விடுவோமோ? ஆண்டவரை ஆலயத்தில் சென்று ஆராதிக்க இயலாமல் போய்விடுமோ? நம் நண்பர்களை சந்திக்கவே இயலாதா? பிள்ளைகள் பள்ளி கூடங்களுக்கு செல்லவே இயலாதா? நாம் அலுவலகங்களுக்கு, பணி இடங்களுக்கு செல்லாமலே இப்படியே கட்டுண்டுவிடுவோமோ? ஆண்டவன் படைத்த அழகிய உலகை காண முடியாதோ? அதை அனுபவிக்க இயலாதோ? என வெதும்பி போன நம் உள்ளங்களுக்கு ஒரே ஆறுதல் நம்முடைய தினசரி செப கூட்டம்.

தொழில் நுட்பத்தின் உதவியால் நாம் அனைவரும் இணைந்தோம். முதல் முறையாக மனம் முழு நன்றி தெரிவித்தது இந்த தொழில்நுட்பத்திற்கு. எந்த ஒரு புது முயற்சிக்கும், வெற்றிக்கும் ஒரு நல்ல தொடக்கம் மிகவும் அவசியம். இந்த நச்சுகிருமி நம் சந்திப்பை, நம் விருதோம்பல்களை தடுத்திருக்கலாம், ஆனால் நம் இறை பக்தியையும் இறை நம்பிக்கையும் தடுக்கவோ தகற்கவோ இயலாது.

RTPTCA உறுப்பினர்களின் முயற்சியால் அனைத்து குடும்பங்களின் தினசரி செபக் கூட்டம் நிகழ்நிலை அழைப்பின் வாயிலாக [Online, virtual] தொழில்நுட்ப உதவியுடன் நம் அனைவரையும் இணைத்தது. தினம் மாலை 6:30 மணியளவில் அனைவரும் நிகழ்வலை அழைப்பில் இணைந்து இறைவனை வணங்கி துதி பாடுகின்றோம். பதினைந்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை இணைத்தது இந்த பிரார்த்தனை கூட்டம். இறைவனை நம்பி ஓன்று கேட்டால் அதை அவர் கொடுப்பார், அதையே கூட்டமாக சேர்ந்து கோரினால், அதை நிச்சயமாக கொடுப்பார்.

இந்த தினசரி பிரார்த்தனை நாட்களில் ஜெபமாலை ஜெபித்து  இறைவனிடம் மன்றாடி வேண்டி கொண்டதெல்லாம் ஒன்றே ஓன்று தான், இந்த கொடிய Covid-19 நச்சு கிருமியை விரைவில் தடுத்து நிறுத்தவும், அதன் பிடியில் இருந்து நம் பூவுலகை மீட்டு எடுக்கவும் தான். செபம் மற்றும் பாடல்கள் என அனைத்திலும், அனைத்து குடும்பங்களிலும் இருந்து ,குழந்தைகள், பிள்ளைகள், தாய், தந்தை என அனைவரும் மகிழிச்சியுடனும், ஆர்வத்துடனும் பங்கேற்கின்றனர்.

தினமும், மனமானது மாலை 6:30 மணியை தேடி காத்திருக்கின்றது. ஒவ்வொரு புதன் கிழமை தோறும் சிறு குழந்தைகள் அவர்களின் மழலை மொழியில் இறைவனை புகழ்ந்துப் பாடுவதும், பிரார்த்தனை செய்வதும் கேட்பவர் செவிகளுக்கு இன்ப விருந்து. சனி கிழமைகளில் பள்ளி மற்றும் கல்லூரி பிள்ளைகள் ஒன்றாக இணைந்து ஜெபமாலை செய்கின்றனர், ஒவ்வொரு குடும்பங்களும் தலைமை ஏற்று ஜெபமாலையை செவ்வனே செய்து வருகின்றனர்.

இந்த முயற்சியில் நம் குடும்பங்கள் மட்டுமில்லாது அருள் தந்தை  ஞானப்பிரகாசம் மற்றும் அவரது நண்பர்  அருள் தந்தை அருள் அவர்களும் நிகழ்வலை தொடர்பில் இணைந்து நமக்கு அருள்வாக்கு மற்றும் தேவ சிந்தனைகளை சிறப்பாக பகிர்ந்தனர். தேவாலயத்திற்கு நேரடியாக சென்று இறைவனை தொழ இயலாத சூழ்நிலையில் குருவானவர்கள் நம்மிடையே இணைந்து கூறிய தேவ வார்த்தைகள் நம் மனங்களை ஆறுதல் படுத்தியது. இறைவனை ஆராதிக்கும் இந்த ஜெபமாலை பயணம் இன்னும் தொடர்கிறது …

Share your thoughts