
புது வாழ்வு – தவக்கால தியானம் – 2025
ஆக்கம் : சவேரியார் இன்னாசிமுத்து
திருத்தம் : பெனிட்டா ஜோசப்
இந்த வருட தவக்கால தியானம் ஏழு நாள்கள் (ஏப்ரல் 7-16, 2025) இரவு 8:30 மணிக்கு Google சந்திப்பு மூலம் நடைப் பெற்றது. திருத் தந்தை திரவிய ரூபன் அடிகள் தமிழகத்திலிருந்து, அதிகாலை துயிலெழுந்து சிறப்பாக நடத்திக் கொடுத்தார். ஏப்ரல் 12-ம் தேதி சனிக்கிழமை காலை திருக்காய வரம் பெற்ற Sr. விமலா அவர்கள் சேலத்திலிருந்து இணைந்து தன்னுடைய இறை அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்துக் கொண்டார்கள்.
தியான நாட்கள் (ஏப்ரல் 7-16, 2025)
தியான நேரம்: 8:30 PM – 9:30 PM (US time) , 7 AM – 8 AM (India Time)
இந்த தியானம் ஏழு அடிப்படை உண்மைகளை விவிலிய மேற்கோள்களோடு விளக்கியது. இந்த அடிப்படை உண்மைகளை அறிந்துக் கொண்டால் நம் கிறிஸ்துவ வாழ்வு சிறக்கும்.
ஏழு அடிப்படை உண்மைகள்
- கடவுளின் அன்பு
- பாவம்
- இயேசு புது வாழ்வின் மையம்
- விசுவாசம்/ நம்பிக்கை
- பரிசுத்த ஆவி
- சமூகம்
- நிறைவாழ்வு
இந்தக் கட்டுரையில் இறை வசனங்கள் நீங்கள் தியானிக்க உதவியாக Highlight செய்துக் காட்டப் பட்டுள்ளது. இறை வசனங்ககளை படித்து தியானிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஏப்ரல் 7, 2025 திங்கட்கிழமை
கழுகு தன் இளமையை புதுப்பிப்பது போல நாமும் நம் வாழ்வை புதுப்பிக்க வேண்டும்.
“அவர் உன் வாழ்நாளை நலன்களால் நிறைவுறச் செய்கின்றார்; உன் இளமை கழுகின் இளமையெனப் புதிதாய்ப் பொலிவுறும்.” ( திரு 103:5)
கழுகு தம் இளமையை புதுப்பிக்க பாறையில் மோதி, மோதி தன்னுடைய பழைய அலகை, நகத்தை உடைத்து, புதிய அலகையும், நகத்தையும் பெருமாம் . அதுப் போல நாமும் பழைய வாழ்க்கையை, பாவத்தை உடைத்தெறிய வேண்டும்.
பிலிப்பும் எத்தியோப்பிய நிதியமைச்சரும் ( திருத்தூதர் பணி 8:26-39 )
திருத்தூதர் பிலிப் பரிசுத்த ஆவியால் உந்தப்பட்டு , எத்தியோப்பிய நிதியமைச்சருக்கு விவிலியத்தை விளக்கியதை, அதனுடைய வரலாற்று பிண்ணணியை விளக்கினார். எத்தியோப்பிய நிதியமைச்சர் உயர்ந்த பதவியில் இருந்தாலும், பிலிப்பு அவரை அணுகிய போது , தடுக்காமல் அவரை அனுமதித்து, அவர் விளக்கத்தை ஏற்றுக் கொண்டு திருமுழுக்கு பெற்றார். அதுப்போல நாமும் இயேசுவை , பரிசுத்த ஆவியை நம் வாழ்வில் அனுமதிக்க வேண்டும், நம் வாழ்வை மாற்ற வேண்டும். வரும் நாள்களில் ஏழு அடிப்படை ஆன்மிக உண்மைகளை ( Seven Spiritual Truth) பார்ப்போம்.
ஏப்ரல் 8, 2025 செவ்வாய்க்கிழமை
இன்று நாம் முதல் அடிப்படை உண்மையை பார்க்க இருக்கிறோம் .
முதல் அடிப்படை உண்மை கடவுளின் அன்பு:
1. முதல் அடிப்படை உண்மை கடவுளின் அன்பு: புதிய வாழ்வின் தொடக்கம் கடவுளின் அன்பு. கடவுள் நம்மை அன்பு செய்கிறார், நம்மை வாழவைக்க இயற்கையை படைத்து நமக்கு அளித்தார். கடவுள் நம்மை தனிப்பட்ட முறையில் அன்பு செய்கிறார், ஏனென்றால் அவர் நமது தந்தையாய் இருக்கிறார். எசாயா (43:1-4) வசனங்களை சிந்திப்போம்.
உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்,நீ எனக்கு உரியவன் (43:1)
இந்த வசனத்திற்கு தந்தையின் அனுபவத்தை பகிர்ந்தார். தந்தை அவர்கள் Zambia வேலை செய்தப் போது ஒரு சிறு குழந்தையை சந்திக்கிறார், அந்த குழந்தை, “ஹலோ Father” என்று அழைத்து , தன் பெயரை சொல்லி அறிமுகம் செய்துக் கொள்கிறது. அடுத்த நாள் கோவிலில் அந்த குழந்தையை சந்திக்கிறார், “ஹலோ Father, என் பெயர் சொல்லுங்க ” என்று மழலை குரலில் கேட்கிறது. பாவம் தந்தை அவர்களுக்கு பெயர் மறந்து விட்டது. “ஐயோ மறந்து விட்டேனே” என்று வருத்தப்பட்டு, “sorry ,sorry , மறுபடியும் ஒருமுறை உன் பெயரை ஞயாபகப் படுத்தும்மா” என்றுக் கேட்டு பெயரை தெரிந்துக் கொள்கிறார். அடுத்த நாள் அதே குழந்தையை சந்திக்கிறார், இந்த முறையும் அந்தக் குழந்தை “ஹலோ Father, என் பெயர் சொல்லுங்க ” என்று மழலை குரலில் கேட்கிறது. இந்த முறை தந்தை அவர்களுக்கு தர்ம சங்கடமான நிலை, மறுபடியும் மறந்து விட்டார். “sorry ,sorry , மறுபடியும் ஒருமுறை உன் பெயரை ஞயாபகப் படுத்தும்மா” கெஞ்சுகிறார். அந்த பிஞ்சு குழந்தை முகம் வாடி விடுகிறது. வேண்டா வெறுப்பாக பெயரை சொல்கிறாள். இது நடந்து பல வாரங்கள் செல்கின்றன. ஒரு விழாவில் பங்கேற்க பள்ளிக்கு செல்கிறார். அங்கு நிறைய குழந்தைகளுக்கிடையே தந்தை பெயர் மறந்துப் போன குழந்தையையும் பார்க்கிறார். அந்த குழந்தை தந்தை அவர்கள் கண்ணில் படமால் கடைசி வரிசையில் மறைந்துக் கொள்கிறார். தந்தை பெயரை மறந்திருப்பார் என்ற எண்ணம். அப்போது தத்தை அவர்கள் “Bene, How are you ? , இங்கே வா!” என்று அழைக்கிறார். அந்த நொடியில் அந்த குழந்தையின் முகத்தில், பிரகாசம், மகிழ்ச்சி, சந்தோசம். அந்த மலர்ந்த முகம் இன்னும் தந்தையின் நினைவில் அகலவில்லை. அந்தக் குழந்தை ஓடி வந்து தந்தையை கட்டி அனணத்துக் கொள்கிறது. என்ன ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு!
இதுப் போன்று, இறைவன் நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்திருக்கிறார்.
அன்பில்லாதோர் கடவுளை அறிந்து கொள்ளவில்லை; ஏனெனில், கடவுள் அன்பாய் இருக்கிறார். 1 யோவான் (4:8)
நம் பணத்தை வைத்து, பதவியை வைத்து, அழகை வைத்து , அதிகாரத்தை வைத்து கடவுள் நம்மை அன்பு செய்யவில்லை. இவை அனைத்தும் கடவுளுக்கு ஒரு பொருட்டு இல்லை. கடவுள் நம் அனைவரையும் நிபந்தனையற்று அன்பு செய்கிறார். கடவுள் அன்பாய் இருக்கிறார். நம்முடைய குற்றங்களோடு, குறைகளோடு, பலவீனங்களோடு கடவுள் நம்மை அன்பு செய்கிறார்.
ஏனெனில் உங்களுக்காக நான் வகுத்திருக்கும் திட்டங்கள் எனக்குத் தெரியும் அன்றோ! அவை வளமான எதிர்காலத்தையும் நம்பிக்கையும் உங்களுக்கு அளிப்பதற்கான நல்வாழ்வின் திட்டங்களே அன்றி, கேடு விளைவிப்பதற்கான திட்டங்கள் அல்ல, என்கிறார் ஆண்டவர் ( எரேமியா 29:11)
மண்ணுலகிலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன. ( எசாயா 55:9)
தம்மிடம் இருப்பதை கொடுப்பது இவ்வுலக தந்தையரின் அன்பு, சிறந்ததைக் கொடுப்பது விண்ணக தந்தையின் அன்பு.
அவரே முதலில் நம்மிடம் அன்பு செலுத்தியதால் நாமும் அன்பு செலுத்துகிறோம் (1 யோவான் 4:19) நீங்கள் என்னைத் தேர்ந்து கொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்து கொண்டேன் ( யோவான் 15: 16)
கடவுள் நம்மை முதல் அடி எடுத்து முதலில் அன்பு செய்கிறார். நாம் குழந்தைகளாக மாறி ,கடவுள் நம்மை அன்பு செய்ய அனுமதிப்போம். கடவுளின் கரங்களில் நம் வாழ்வை விட்டுக். நம் வாழ்வில் புதுமைகள் நிகழ கடவுளின் அன்பை அனுமதிப்போம்.
ஏப்ரல் 9, 2025 புதன் கிழமை
இரண்டாவது அடிப்படை உண்மை : பாவம்
முழுமையான நற்செய்தி மட்டும் தான் நமக்கு விடுதலை அளிக்கும். மனிதர்களிடையே பல்வேறு பிரச்சனைகள். பணக்காரன் – ஏழை, சாதி பாகுபாடு, கருப்பு-வெள்ளை பாகுபாடு. தந்தையின் சக மாணவர் ஒருவர் வெளி நாட்டுக்கு படிக்க செல்கிறார். அங்குள்ள நீச்சல் குளம் ஒன்றில் குளிக்க செல்கிறார். அவர் தண்ணீரில் இறங்கியவுடன் அந்த நாட்டுக்காரர்கள் அனைவரும் நீச்சல் குளத்தைவிட்டு வெளியே வந்து விடுகிறார்கள். அவமானப் பட்டு நிற்கிறார் குருமாணவர்.
இவ்வளவு துன்பங்களுக்கிடையே, உலக வெறுப்புகளிடையே , நாம் கடவுளின் அன்பை உணர முடிகிறதா? கடவுளின் அன்பை சுவைப்பதற்கு தடையாக இருப்பது எது ? பாவம் தான் கடவுளின் அன்பை சுவைக்கத் தடையாக உள்ளது. பாவம் தான் இரண்டாவது அடிப்படை உண்மை.
ஏனெனில், எல்லாருமே பாவம் செய்து கடவுள் கொடுத்த மேன்மையை இழந்து போயினர் ( உரோமையர் 3:23)
இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள். (திருப்பாடல்கள் 51:5)
கடவுளை நம்பாமல் இருப்பது பாவம், மற்றவைகள் எடுத்துக்காட்டாக பொய் சொல்லுதல், திருடுதல் பாவச் செயல்கள்.
ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், “தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம், ஆனால், நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில், அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டுச் சொன்னார். ( தொடக்க நூல் 2:16-17)
ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், “கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?” என்று கேட்டது ( தொடக்க நூல் 3:1)
கடவுள் எல்லா மரத்து கனிகளையும் உண்ணலாம், ஒரு மரத்தின் கனியை தவிர. ஆனால் சாத்தான் பெண்ணிடம் “கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?” என்று பொய்யுரைக்கிறான். போட்டு வாங்குகிறான்.
பாம்பு பெண்ணிடம், “நீங்கள் சாகவே மாட்டீர்கள்; ஏனெனில், நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்” என்றது ( தொடக்க நூல் 3:4,5)
சாத்தான் பெண்ணிடம் ஆசையை தூண்டுகிறான். கடவுள் சொல்வதை திரித்து சொல்கிறான், பொய் சொல்கிறான்.
சாத்தானே உங்களுக்குத் தந்தை. உங்கள் தந்தையின் ஆசைப்படி நடப்பதே உங்கள் விருப்பம். தொடக்க முதல் அவன் ஒரு கொலையாளி. அவனிடம் உண்மை இல்லாததால் அவன் உண்மையைச் சார்ந்து நிற்கவில்லை. அவன் பொய் பேசும்போதும் அது அவனுக்கு இயல்பாக இருக்கிறது. ஏனெனில் ,அவன் பொய்யன், பொய்ம்மையின் பிறப்பிடம். ( யோவான் 8:44)
மேலே உள்ள வார்த்தைகள் சாத்தான் ஒரு பொய்யன் என்பதை ஏசு சொல்கிறார்.
ஐம்புலன்கள் குழந்தைகள் வளர்வதற்கு உதவுகின்றன. சுவை அறிய, தாய், தந்தை , குடும்பம் அறிய, மற்றவர்களை பார்க்க , கேட்க குழந்தைகளுக்கு உதவி அவர்கள் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இந்த ஐம்புலன்கள் தான் நாம் வளர்ந்தப் பின், நாம் பாவத்தில் விழ காரணம் ஆகின்றன.
அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான் ( தொடக்க நூல் 3:6)
ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது ( உரோமையர் 5:12)
பாவத்தினால் சாவு நம்மைக் கவ்விக் கொண்டது. வாழும் பொழுதே நாம் நடைப் பிணங்களாக வலம் வருகிறோம்.
பாவத்தால்/சாத்தானால் வருவது பிரிவினை. சாத்தான் நம்மை கடவுளிடமிருந்து பிரிக்கிறான், மற்றவர்களிடமிருந்து பிரிக்கிறான் , கடைசியாக நம்மிடமிருந்தே நம்மைப் பிரிக்கிறான்.
நாம் எத்தனை முறை துன்பத்தில் உழலும் போது கடவுளை நம்பாமல், கடவுள் மேல் அவநம்பிக்கை வைத்துள்ளோம்?
மற்றவர்களுடன் பேசாமல் இருக்கிறோமா? மற்றவர்களைப் பார்த்து வயிற்றெரிச்சல் படுகிறோமா ? அப்படி என்றால் நாம் பாவத்தில் இருக்கிறோம் என்று பொருள்.
திருச்சட்டம் ஆவிக்குரியது என்பது நமக்குத் தெரிந்ததே; ஆனால், நான் ஊனியல்பினன்; பாவத்திற்கு அடிமையாக விற்கப்பட்டவன். ஏனெனில், நான் செய்வது என்னவென்று எனக்கே தெரிவதில்லை; எதைச் செய்ய விரும்புகிறேனோ அதை நான் செய்வதில்லை; எதை வெறுக்கிறேனோ அதையே செய்கிறேன் ( உரோமையர் 7:14)
ஆனால், அவ்வாறு செய்வது என்னுள் குடிகொண்டிருக்கும் பாவமே; நான் அல்ல. (உரோமையர் 7:17)
இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள். இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும், வெண்மையாவேன். (திருப்பாடல்கள் 51: 5-7)
அந்தோ! இரங்கத்தக்க மனிதன் நான்! சாவுக்குள்ளாக்கும் இந்த உடலினின்று என்னை விடுவிப்பவர் யார்? நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்தாம் விடுவிப்பார் ( உரோமையர் 7:24,25)
கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இதனால், அன்பு இன்னதென்று அறிந்து கொண்டோம். ஆகவே, நாமும் நம் சகோதரர் சகோதரிகளுக்காக உயிரைக் கொடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்
தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மேல் அன்பு கூர்ந்தார். (யோவான் 3:16)
அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார் ( மத்தேயு 1:21)
இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை. ( திருத்தூதர் பணிகள் 4:12)
நமக்கு எதிரான ஒப்பந்த விதிகள் பல கொண்ட கடன்பத்திரத்தை அவர் அழித்துவிட்டார். அதைச் சிலுவையில் வைத்து ஆணியடித்து அறவே ஒழித்து விட்டார் (கொலோசையர் 2:14)
இயேசு கிறிஸ்து ஒருவரால் மட்டும் தான் நம்மை மீட்க முடியும்.
ஏப்ரல் 12, 2025 சனிக் கிழமை
Sr. விமலா தவக்காலத்தில் ஐந்து திருகாயங்கள் வரம் பெற்றவர். அவர் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துக் கொள்ள உள்ளார். செபிக்காமலிருக்க, கடவுள் அருகில் செல்ல விடாமல், சாத்தான் அவர்களுக்கு அளித்த பல்வேறு சோதனைகளை, துன்பங்களை விவரித்தார்.
ஏப்ரல் 14, 2025 திங்கள் கிழமை
மூன்றாவது அடிப்படை மறை உண்மை : நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய்க் கடவுள்தாம் விடுவிப்பார். இயேசு தான் புது வாழ்வின் மையம்.
இயேசுவின் காயங்களால் நாம் குணம் பெறுகிறோம். பாவிகள் நமக்காக தன் உயிரைக் கொடுத்து நம்மை மீட்டார் . தம் உயிர்ப்பால் சாவை அழித்தார் .
நம் குற்றங்களுக்காகச் சாகுமாறு கடவுள் இயேசுவை ஒப்புவித்தார்; நம்மைத் தமக்கு ஏற்புடையவர்களாக்குமாறு அவரை உயிர்த்தெழச்செய்தார் . (உரோமையர் 4:25)
நாம் கிறிஸ்து வழியாகத் தமக்கு ஏற்புடையவராகுமாறு கடவுள் பாவம் அறியாத அவரைப் பாவநிலை ஏற்கச் செய்தார். ( 2 கொரிந்தியர் 5:21)
நம் பாவங்களுக்காக ஆண்டவர் இயேசு மரித்துக்கொண்டே இருக்கிறார்.
சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள். (1 பேதுரு 2:24)
இயேசு நம்மை i) மன்னித்துள்ளார் , ii) குணமாக்கியுள்ளார் , iii) மீட்டெடுத்துள்ளார், iv) பிரிவினையை நீக்கி கடவுளோடும், மனிதரோடும் நம்மை ஒப்புரவுபடுத்தியுள்ளார்,
மன்னிப்பைப் பெற்ற நாம் பிறரை மன்னிக்க வேண்டும், குணமான நாம் பிறரை குணப்படுத்த வேண்டும். விடுதலைப் பெற்ற நாம், பிறரை விடுவிக்க வேண்டும்.
திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால், நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும் பொருட்டு வந்துள்ளேன். (யோவான் 10:10)
ஆகையால், நீங்கள் உங்கள் காணிக்கையைப் பலிபீடத்தில் செலுத்த வரும்பொழுது உங்கள் சகோதரர் சகோதரிகள் எவருக்கும் உங்கள் மேல் ஏதோ மனத்தாங்கல் உண்டென அங்கே நினைவுற்றால், 24அங்கேயே பலிபீடத்தின்முன் உங்கள் காணிக்கையை வைத்து விட்டுப் போய் முதலில் அவரிடம் நல்லுறவு ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பின்பு வந்து உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள் ( மத்தேயு 5:23-24)
இயேசு கொடுத்த மீட்பை மற்றவர்களுக்கு கொடுக்க நாம் கடமைப் பட்டிருக்கிறோம். இயேசு ஒருவரே நம்மை மீட்க வல்லவர். சிலர் இயேசுவை மறந்து, பணத்தை பற்றிக் கொள்கிறார்கள், சிலர் நற்பெயரை பற்றிக் கொள்கிறார்கள். நாம் நம் வாழ்வில் எதை பற்றிக் கொள்கிறோம் ? இயேசுவையா? இவ்வுலக பணத்தையா , பதவியையா, நற்பெயரையா?
இவராலேயன்றி வேறு எவராலும் மீட்பு இல்லை. ஏனென்றால், நாம் மீட்புப் பெறுமாறு வானத்தின்கீழ், மனிதரிடையே இவரது பெயரன்றி வேறு எந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை. ( திருத்தூதர் பணிகள் 4:12)
அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார் ( மத்தேயு 1:21)
எனவே, இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார். இறைமகன்மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் நான் இவ்வுலகில் வாழ்கிறேன். இவரே என்மீது அன்புகூர்ந்தார். எனக்காகத் தம்மையே ஒப்புவித்தார். (கலாத்தியர் 2:20)
ஏப்ரல் 15, 2025 செவ்வாய்கிழமை
நான்காவது அடிப்படை உண்மை : விசுவாசம்/ நம்பிக்கை ( Faith )
விசுவாசம் என்பது இயேசுவை நம்புவதற்கும் அவரை ஒரே மீட்பராக ஏற்றுக்கொள்வதற்கும் நாம் எடுக்கும் முடிவு.
நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல; மாறாக இது கடவுளின் கொடை. (எபேசியர் 2:8)
ஆபிராகம் விசுவாசத்தின், நம்பிக்கையின் தந்தை என்று அழைக்கப் படுகிறார். விசுவாசம் நாம் எடுக்கும் ஒரு முடிவு, விசுவாசம் ஒரு அனுபவம், விசுவாசம் நம் வாழ்க்கையில் ஒரு மாற்றம்.
ஏனெனில், ‘இயேசு ஆண்டவர்’ என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள். இவ்வாறு, உள்ளூர நம்புவோர் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவர்; வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர். (உரோமையர் 10:9-10)
இயேசுவே நம் மீட்பர் என்று நம்புகிறோமா? மீட்படைய நாம் இயேசுவை நம்புவோம்.
ஐந்தாவது அடிப்படை உண்மை : பரிசுத்த ஆவி
இயேசு விண்ணகம் சென்றப் பின், பரிசுத்த ஆவியை கொடையாக நமக்கு விட்டுச் சென்றுள்ளார். பரிசுத்த ஆவி நம் இதயத்தை மாற்றுகிறார், நம் வாழ்வை மாற்றுகிறார். நம்மை இயேசுவின் சாட்சியாக மாற நமக்கு திடனை அளிக்கிறார்..
நான் உங்களிடம் சொல்வது உண்மையே. நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன். (யோவான் 16:7)
இதோ, என் தந்தை வாக்களித்த வல்லமையை நான் உங்களுக்கு அனுப்புகிறேன். நீங்கள் உன்னதத்திலிருந்து வரும் அவ்வல்லமையால் ஆட்கொள்ளப்படும்வரை இந்நகரத்திலேயே இருங்கள் ( லூக்கா 24:29)
அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது; எனெனில், நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. (உரோமையர் 5:5)
அருள்கொடைகள் பலவகையுண்டு; ஆனால், தூய ஆவியார் ஒருவரே. (1 கொரிந்தியர் 12:4)
ஏப்ரல் 16, 2025 புதன் கிழமை
ஆறாவது அடிப்படை உண்மை : சமூகம் ( Community)
கிறிஸ்துவ சமூகம் கிறிஸ்துவின் உடல். இயேசுவின் ராஜ்யத்தின் முதல் கனி சமூகம்.
தம் இனத்திற்காக மட்டுமின்றி, சிதறி வாழ்ந்த கடவுளின் பிள்ளைகளை ஒன்றாய்ச் சேர்க்கும் நோக்குடன் அவர்களுக்காகவும் இறக்கப்போகிறார் என்று இறைவாக்காகச் சொன்னார். (யோவான் 11:52)
1 கொரிந்தியர் 12 அதிகாரம் நம் உடல் உறுப்புகளை கிறிஸ்துவ சமூகத்துக்கு ஒப்பிட்டு நாம் வெவேறு இனத்தவராயினும், மொழியினராயினும் ஒன்றுப்பட்டு செயல்படுவதின் அவசியத்தை விளக்குகின்றன.
1 கொரிந்தியர் 13 அதிகாரம் வாழ்வின் அன்பின் அவசியத்தை விளக்குகின்றன.
இயேசுவால் இரட்சிக்கப் பட்ட நாம், கிறிஸ்துவ சமூகமாக வாழ்வது அவசியமாகிறது. நாம் நம் சகோதர, சகோதாரிகளுடன் இணைந்து வாழ்ந்தால் தான், கிறிஸ்துவோடு இணைந்து வாழ்கிறோம் என்றுப் பொருள். இல்லையென்றால் நாம் ஒரு பொய்யான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கிறறோம்.
ஏழாவது அடிப்படை உண்மை : நிறைவாழ்வு ( Eternal Life)
நம் வாழ்வின் நோக்கம் நிறைவாழ்வை, விண்ணக வாழ்வை அடைவது. அதற்கான வழி இயேசுவை நம்புவது தான். நிலைவாழ்வு அடைவதற்கான வழியை, பின் வரும் விவிலிய வாசகங்களை படித்து தியானிப்போம்.
உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார். (யோவான் 11:25)
எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார். நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன் ( யோவான் 6:54)
எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்.✠
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன் ( மத்தேயு 28:19-20)
நன்றி !!

இந்த தியானத்தின் சில பகுதிகள் youtube-ல் பதிவு செய்யப் பட்டுள்ளன.